கண்ணன் அவதாரத் ஸ்தலம். ஒரு சமயம் முனிவர்களின் பிரார்த்தனைப்படி ராமன் தனது கடைசித் தம்பி சத்ருக்கனனை அனுப்பி மது நகரத்தின் அரசனான லவணாசுரனைக் கொல்லச் செய்தான். சத்ருக்கனன் அவனைக் கொன்று யமுனை நதிக்கரையில் அர்த்தசந்திர வடிவத்தில் மதுரா நகரை ஏற்படுத்தியதாக ஐதீகம். இந்த நகரத்தை சத்ருக்கனன் வம்சத்தினர் ஆண்டபிறகு, வசுதேவர் பரம்பரரை ஆண்டதாக புராணங்கள் கூறுகின்றன.
மூலவர் கோவர்த்தநேசன், பாலகிருஷ்ணன் என்னும் திருநாமங்களுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு சத்யபாமா நாச்சியார் என்பது திருநாமம். பிரம்மா, வசுதேவர், தேவகி மற்றும் இந்திராதி தேவர்களுக்கு பகவான் பிரத்யக்ஷம்.
இந்த திவ்யதேசம் மதுரா என்ற ஒரு பெயரில் குறிப்பிடப்பட்டாலும், மதுரா, பிருந்தாவன், கோவர்த்தனகிரி என்ற மூன்று இடங்கள் அடங்கியதாகும். மதுராவில் இருந்து பிருந்தாவன் 10 கி.மீ. தூரத்திலும், கோவர்த்தன் 12 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. மதுராவில் ஜன்மபூமி என்ற பெயரில் கிருஷ்ணன் பிறந்த சிறைச்சாலை பெரிய கோயிலாகக் கட்டப்பட்டுள்ளது.
கண்ணன் வளர்ந்து ஆடிப்பாடி, ஆநிரை மேய்த்து களித்திருந்த பிருந்தாவனத்தில் ரங்க மந்திர் என்ற பெயரில் தென்னாட்டுப் பாணியில் ஒரு கோயில். இங்கு தமிழ்நாட்டு வைஷ்ணவர்களே கைங்கர்யம் செய்து வருகின்றனர். கோவர்த்தனத்தில் கிருஷ்ணன் மலையைக் குடையாக பிடித்த இடத்தில் பாதம் பதிந்த இடம் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.
முக்தி தரும் ஏழு நகரங்களுள் இதுவும் ஒன்று. ஹரித்துவார், வாரணாசி, அயோத்தி, துவாரகை, உஜ்ஜயினி, காஞ்சிபுரம் ஆகியவை மற்ற ஆறு நகரங்கள்.
திருமங்கையாழ்வார் 4 பாசுரங்களும், நம்மாழ்வார் 10 பாசுரங்களும், பெரியாழ்வார் 4 பாசுரங்களும், ஆண்டாள் 6 பாசுரங்களும், தொண்டரடிப்பொடியாழ்வார் 1 பாசுரங்களுமாக மொத்தம் 25 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|